Low-budget films struggle to get prime-time slots

தமிழ் சினிமாவான கோலிவுட்டில் சின்னபட்ஜெட் படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள், மெகா பட்ஜெட் படங்கள் என வரிசையாக தயாராகி வரும் படங்களில் சுமார் 50 படங்கள் படப்பிடிப்பின் இறுதிகட்ட பணிகளிலும், போஸ்ட்புரொடக்ஷன் பணிகளிலும் பிசியாக உள்ளன. சுமார் 50 படங்களுக்கு மேல் சென்சார் முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அதிலும், பிரபலங்களின் படங்கள் வரும் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் ஆகும் என்ற சூழல் நிலவுவதால் சின்ன பட்ஜெட் படங்கள், புதுமுகங்களின் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்படியே போராடி ரிலீஸ் செய்தாலும் நல்ல தியேட்டர்கள் கிடைக்காமலும், ரசிகர்களின் ஆதரவு கிடைக்காமலும் போகும் என சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு ரெடியாகும் படங்களில் தனுஷின் 'மரியான்' வரும் 19ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அதை தொடர்ந்து விஷாலின் 'பட்டத்து யானை', சுந்தர்.சியின்'மதகஜராஜா', விஜய்யின் 'தலைவா', கார்த்தியின் 'பிரியாணி', அஜீத்தின் 'வலை', ரஜினியின் 'கோச்சடையான்', என பல படங்கள் ரிலீசுக்கு வரிசை கட்டுகின்றன. இந்த வரிசையில் பல படங்களுக்கு இப்போதே தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு காட்சிகள் ஒதுக்கப்பட்டு விட்டது. 

அதேநேரம், பணிகள் முடித்து ரிலீசுக்கு ரெடியாக உள்ள சின்னபட்ஜெட் படங்களில்  சுந்தர்ராஜனின் 'சித்திரையில் நிலாச்சோறு', ஷக்திசிதம்பரத்தின் 'மச்சான்', சிவாவின் 'சொன்னா புரியாது', 'உ'. 'நாடி துடிக்குதடி', 'விடியும் வரை பேசு', பசங்க பாண்டியராஜின் 'மூடர் கூடம்', 'வருசநாடு'. 'நெடுஞ்சாலை', 'தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்',  'கல்யாண சமையல் சாதம்' என சின்ன பட்ஜெட் படங்களும் ரிலீசுக்கு வரிசை கட்டுகின்றன. இது மாதிரியான சின்ன பட்ஜெட் படங்களுக்கு போதுமான தியேட்டர் கிடைக்குமா, நினைத்த மாதிரி ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா, தைரியமாக ரிலீஸ் செய்ய முடியுமா என படம் தயாரித்தவர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
சூழல் இப்படியிருக்கும்போது தெலுங்கு, இந்தி, மலையாளம் என இந்திய மொழிகளிலும் ஹாலிவுட்டிலும் இருந்து பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. சின்ன பட்ஜெட் படங்களுக்கான தியேட்டர்களை இதுபோன்ற டப்பிங் படங்கள் பிடித்துக் கொள்வதால் அவர்களுக்கு தியேட்டர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது.
இந்தாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை சுமார் 80 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் பெரிய, சின்ன பட்ஜெட் படங்களும் அடங்கும். இதில் பெரும்பாலான படங்கள் தயாரிப்பாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை மட்டுமே தந்த படங்கள். விரல் விட்டு எண்ணும் அளவில்தான் படங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன.
எது எப்படியோ ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெரும் பாலும் மெகா பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆக இருப்பதால் சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்களுக்கு சிரமம்தான்.
இந்த நிலையை மாற்ற தயாரிப்பாளர்களின் சங்க நிர்வாகிகள் ஒன்று கூடி முடிவெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது

Tags: ,

0 comments:

Leave a Reply

Note: Only a member of this blog may post a comment.